பா.ஜனதா அரசு விலங்குகளை பாதுகாக்கிறது, மனிதர்களை கொல்கிறது சிவசேனா கடும் தாக்கு
பா.ஜனதா அரசு விலங்குகளை பாதுகாக்கிறது, மனிதர்களை கொல்கிறது என சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.;
மும்பை,
பா.ஜனதா அரசு விலங்குகளை பாதுகாக்கிறது, மனிதர்களை கொல்கிறது என சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.
கசாப்பு கடைக்காரர்கள்
பாராளுமன்றத்தில் நேற்று மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட போவதாக சிவசேனா கூறியிருந்தது.
ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் நிலைப்பாட்டை சிவசேனா மாற்றிக்கொண்டது.
இந்த நிலையில் நேற்று வெளியான சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பா.ஜனதா அரசு கசாப்பு கடைக்காரன் என்றும், அவர்கள் விலங்குகளை விட்டுவிட்டு மனிதர்களை கொல்வதாகவும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
இதுபற்றி அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
இரக்கமற்ற தன்மை
நாட்டின் தற்போதைய ஆளும் கட்சியினர் கசாப்பு கடைக்காரர்கள் போல நடந்து கொள்கி்ன்றனர். அவர்கள் விலங்குகளை பாதுகாக்கின்றனர். ஆனால் மனிதர்களை கொன்று குவிக்கின்றனர். இது முற்றிலும் இரக்கமற்ற தன்மையாகும்.
தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதும் ஜனநாயகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. பெரும்பான்மை என்பது நிலையானது கிடையாது. நாட்டு மக்கள் தான் உயர்ந்தவர்கள்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மோடியின் அரசை ஒருபோதும் கீேழ இழுத்துவிட போவதில்லை. ஆனால் அவர்களின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
சர்வாதிகாரம்
மக்களின் ஆணைப்படி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர். பின்னர் தங்களின் சர்வாதிகாரத்திற்கான கருவியாக அதை பயன்படுத்தி கொள்கின்றனர்.
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்தனர். தங்களின் அரசியல் லாபத்திற்காக அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர். ஆனால் தேர்தல் வாய் சவடால்கள் ஒருநாளும் நிறைவேற்றப்பட்டதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.