நவிமும்பை அருகே பழைய சோறு போட்டவரை குத்திக்கொன்ற பிச்சைக்காரர் தெரு நாய்களுக்கு சப்பாத்தி கொடுத்ததால் ஆத்திரம்

தெரு நாய்களுக்கு சப்பாத்தி கொடுத்துவிட்டு, தனக்கு பழைய சோறு போட்ட ஆத்திரத்தில் கட்டிட காவலாளியை பிச்சைக்காரர் ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் நவிமும்பை அருகே நடந்துள்ளது.

Update: 2018-07-20 23:00 GMT
மும்பை, 

தெரு நாய்களுக்கு சப்பாத்தி கொடுத்துவிட்டு, தனக்கு பழைய சோறு போட்ட ஆத்திரத்தில் கட்டிட காவலாளியை பிச்சைக்காரர் ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் நவிமும்பை அருகே நடந்துள்ளது.

பிச்சைக்காரர்

நவிமும்பை அருகே உள்ள துர்பே பொன்சாரி கிராமத்தை சேர்ந்தவர் சார்யு பிரசாத்(வயது52). புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டுக்கு தினசரி அந்த பகுதியை சேர்ந்த தன்குமார்(35) என்ற பிச்சைக்காரர் சாப்பாடு கேட்டு வருவது வழக்கம்.

அவருக்கு சார்யு பிரசாத் தனது வீட்டில் சமைத்த பழைய சோறை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்து இருக்கிறார்.

தெரு நாய்களுக்கு சப்பாத்தி

அதே நேரத்தில் அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு சார்யு பிரசாத் சப்பாத்தி கொடுத்து வந்துள்ளார். இதை நாள்தோறும் கவனித்த பிச்சைக்காரர் தன்குமார் தன்னை சார்யு பிரசாத் தெருநாயை விட கேவலமாக நடத்துவதாக கருதினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் சார்யு பிரசாத் வீட்டுக்கு பிச்சைக்காரர் தன்குமார் சென்றார். அப்போது வழக்கம் போல வீட்டில் இருந்த பழைய உணவை அவருக்கு கொடுத்துவிட்டு, தெருநாய்களுக்கு சப்பாத்திகள் போட்டு உள்ளார்.

குத்திக்கொலை

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரர் தன்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சார்யு பிரசாத்தை சரமாரியாக குத்தினார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் தன்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த சார்யு பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த துர்பே எம்.ஐ.டி.சி. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பிச்சைக்காரர் தன்குமாரை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்