லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து முடங்கியது பள்ளிக்கூட பஸ்களும் ஓடவில்லை
நாடு முழுவதும் நடந்த லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மராட்டியத்தில் சரக்கு போக்குவரத்து முடங்கியது.
மும்பை,
நாடு முழுவதும் நடந்த லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மராட்டியத்தில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஒரு நாள் பள்ளிக்கூட பஸ்களும் இயக்கப்படவில்லை.
லாரிகள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுவது, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி நேற்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. மராட்டியத்திலும் லாரிகள் ஓடவில்லை.
விலை உயரும் அபாயம்
இதன் காரணமாக சரக்கு போக்குவரத்து முடங்கியது. வாஷி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் பகுதியில் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் மார்க்கெட்டில் சரக்குகள் தேங்கும் சூழல் உண்டாகும்.
மேலும் மார்க்கெட்டுக்கு வரவேண்டிய சரக்குகளின் வரத்தும் பாதிக்கப்படும். மழையின் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில், லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் பள்ளிக்கூட பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளி குழந்தைகளை அவர்களது பெற்றோரே பள்ளிகளுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.
மும்பையில் 8 ஆயிரம் தனியார் பஸ்களும், மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் தனியார் பஸ்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக பள்ளி பஸ் மற்றும் கம்பெனி பஸ் உரிமையாளர்கள் அசோஷியேசன் தெரிவித்து உள்ளது.