கடலூரில் குறைகேட்பு கூட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் வாங்க மறுக்கிறார்கள் என்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது கடலூரில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.

Update: 2018-07-20 22:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா தலைமையில், சப்-கலெக்டர் சரயூ முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ரவீந்திரன்:-பரவனாறு புனரமைப்பு பணிகளை முடிக்காமல் பணிகள் நிறைவடைந்ததாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. முழுமையாக பணி செய்தால் தான் வெள்ளத்தில் இருந்து அப்பகுதியை காப்பாற்ற முடியும்.

குமரகுரு:-சொட்டுநீர் பாசன திட்டத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

வேல்முருகன்:-கால்நடைத்துறை மருந்தகங்களுக்கு ஒதுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் வெளியில் விற்கப்படுகின்றன.

செல்வராஜ்:-ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இதுவரை 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தான் திறக்கப்பட்டுள்ளது, இன்னும் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட வேண்டும்.

கலியபெருமாள்:-மானாவாரி விவசாயிகளுக்கு உழவு மானியம், விதை மானியம் தர வேண்டும், விருத்தாசலத்தில் கலப்பட எண்ணெய் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெங்கடேசன், கார்மாங்குடி:-நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு சென்றால், ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது எனச்சொல்லி நெல்லை வாங்க மறுக்கின்றனர். ஆனால் அதே நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். இதனால் விவசாயிக்கு ஒரு குவிண்டாலுக்கு 300 முதல் 350 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

ஜெகதீசுவரன்:-பெலாந்துறை அணைக்கட்டில் எப்போதும் 4 அடி தண்ணீர் இருக்கும், ஆனால் அப்பகுதியில் உள்ள 2 சிமெண்டு ஆலைகளால் பெலாந்துறை அணைக்கட்டு வறண்டு விட்டது, நிலத்தடி நீர் மட்டமும் 50 அடியில் இருந்து 500 அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் ஆழ்துளை கிணறு போட 17 லட்சம் ரூபாய் செலவாகிறது. இதற்கு காரணமான சிமெண்டு ஆலைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு இழப்பீடு வாங்கித்தர வேண்டும்.

கணேசன்:-தொட்டாங்குறிச்சி பகுதியில் குரங்குத்தொல்லை அதிகமாக உள்ளது, பயிர்களை குரங்குகள் நாசப்படுத்துகின்றன.

மாதவன்:-ஸ்ரீமுஷ்ணம் செங்கால் ஓடையை தூர்வார வேண்டும். சுமார் ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை அவர்களின் வங்கிக்கணக்குக்கு போகாமல் வேறுநபர்களின் வங்கிக் கணக்குக்குமாறிப்போய் உள்ளது. தே.புடையூர் ஊராட்சியில் 1,500 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு சுமார் 100 பேர் கிட்னி கல் பிரச்சினையில் இறந்துள்ளனர். இப்போதும் 20-க்கும் அதிகமானவர்கள் கிட்னி கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 50 வயதுக்கு மேல் உயிர்வாழ்வதே அரிதாக உள்ளது.

மாவட்ட வருவாய் அதிகாரி:-பயிர்காப்பீடு பிரச்சினை தொடர்பாக அடுத்தவாரம் இன்சூரன்சு அதிகாரிகளை வரவழைத்து கலெக்டர் கூட்டம் நடத்த உள்ளார்.

குஞ்சிதபாதம், கீரப்பாளையம்:-அல்லூர் முதல் கீரப்பாளையம் வரை வாய்க்காலை சுத்தம் செய்தால் தான் வீராணம் தண்ணீர் கடைமடை வரை வர முடியும். ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் பட்டாமாற்றம் செய்து தருவதில் காலதாமதம் செய்கிறார்கள். கூடலையாத்தூரில் மணல் திருட்டை தடுக்க சோதனை சாவடி அமைக்க வேண்டும்.

ரங்கநாயகி:-ராதாவாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சென்ற மாதமே சொன்னேன், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

காந்தி, அண்ணாகிராமம்:-அண்ணாகிராமம் பகுதியில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி சென்னைக்கு கொண்டு செல்கின்றனர். இப்போது திண்டிவனத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக பெண்ணையாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் முன்பு பச்சைப்பசேல் என்று இருந்த பகுதிகளெல்லாம் வாட்டம் கண்டு விட்டது. மேலும் அப்பகுதியில் காட்டுப்பன்றி தொல்லையும் அதிகமாக உள்ளது.

வனத்துறை ஊழியர்:-24 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்வேலி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து தான் காட்டுப்பன்றிகள் வருகின்றன. அதனை தடுக்க முடியாது.

மாவட்ட வருவாய் அதிகாரி:-காட்டுப்பன்றி வரும் வழித்தடத்தில் தலைமுடியை போட்டால் காட்டுப்பன்றி வராது என்கிறார்கள், முயற்சி செய்து பாருங்கள்.

சுந்தரமூர்த்தி:-கடலூர் உழவர்சந்தையில் வாழைத்தார் விலை குறைவாக உள்ளது. எனவே வெளிமாவட்டங்களில் உள்ள உழவர்சந்தைக்கு வாழைத்தார்களை கொண்டு சென்று விற்பனை செய்ய வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

துணை இயக்குனர் ஜெயகுமார்:-உழவர்சந்தைக்கு வெளியில் வைத்து தான் வாழைத்தார்களை விற்பனை செய்கின்றனர், உழவர்சந்தைக்குள் கொண்டு வந்தால் விலை நிர்ணயம் செய்யலாம். வெளியூர் உழவர்சந்தைகளுக்கு வாழைத்தார்களை கொண்டு செல்ல உழவர்சந்தை சார்பில் வாகனம் ஏற்பாடு செய்ய இடமில்லை.

பலராமன்:-ராசாகுப்பம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த இழப்பீடு தொகை தருகிறார்கள். சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 4 மடங்கு தொகை இழப்பீடாக தருவோம் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு ஒரு முதல்-அமைச்சர், இங்கு ஒரு முதல்-அமைச்சரா? எல்லோருக்கும் ஒரே முதல்-அமைச்சர் தானே, எனவே எங்களுக்கும் 4 மடங்கு இழப்பீடு தர வேண்டும், அதேப்போல் அங்கு தென்னைமரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருகிறார்கள், ஆனால் இங்கு ஒரு தென்னை மரத்துக்கு 27 ஆயிரம் ரூபாய் தான் தருகிறார்கள். அதனையும் உயர்த்தி தர வேண்டும்.

முருகானந்தம்:-சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சில அரசியல்வாதிகளின் நலனுக்காக கரும்பு அரவை பருவத்தை முன்கூட்டியே தொடங்குகிறார்கள். இதனால் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுகிறது, எனவே டிசம்பர்-ஜனவரி மாதத்தில் அரவை தொடங்க வேண்டும், இதன்மூலம் சர்க்கரை கட்டுமானம் அதிகம் உள்ள கரும்பு சர்க்கரை ஆலைக்கு வரும், ஆலைக்கும் லாபம் கிடைக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

பாலு, குமராட்சி:-வீராணம் ஏரியில் வண்டல் மண் அள்ள 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை 6 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

கூட்டத்தில் கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்த், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்