கட்டணத்தை குறைக்கக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம், நிர்வாகம் கடும் எச்சரிக்கை
கட்டணத்தை குறைக்கக்கோரி புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1.37 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலித்தது.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்த நிலையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் கட்டணமாக கொடுத்துவிட்டு வந்து அரசு கல்லூரியில் இடம் பெற்றுக்கொண்டு சிறிதளவு கட்டண உயர்வுக்கு எதிராக போராடுவதை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
எம்.எல்.ஏ.க்களின் கருத்தை கேட்ட சபாநாயகர் வைத்திலிங்கம், இந்த கட்டண உயர்வில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கும், ஏழை குடும்பத்தை (சிவப்பு நிற ரேசன்கார்டு வைத்திருப்போர்) சேர்ந்த மாணவர்களுக்கும் விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதா? என்று பரிசீலிக்குமாறு அரசை கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் நேற்றும் வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவிகள் சுகாதாரத்துறை செயலாளரிடம் மனு அளிப்பதற்காக கல்லூரியில் இருந்து தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். வழுதாவூர் சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு அவர்கள் கட்டணத்தை குறைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன்பின் மாணவர்கள் பிரதிநிதிகள் 10 பேர் தலைமை செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கட்டணத்தை குறைக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வருகிற 23–ந்தேதி மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வராவிட்டால் பல்கலைக்கழக தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். கல்லூரி விடுதியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நிலவும் நிதி நெருக்கடியில் கட்டண உயர்வு அத்தியாவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.