ஆலந்தூரில் செல்போன் வியாபாரி கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

வேலைக்கார பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் செல்போன் வியாபாரியை கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Update: 2018-07-20 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் வசித்து வந்த செல்போன் வியாபாரி முகமது சுல்தான் (வயது 40) கடந்த 18-ந் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி விசாரணை நடத்த பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் முகமது சுல்தான் வீட்டில் வேலை செய்து வந்த ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த ரெனியாபானு (19) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் ரெனியாபானு, முகமது சுல்தான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அதுபற்றி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுக்கோட்டை கோட்டைபட்டினத்தை சேர்ந்த இமாமுதீன் (21) என்பவரிடம் கூறினேன். இதனால் இமாமுதீன் முகமது சுல்தானை கொலை செய்ததாக தெரிவித்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து தலைமறைவான இமாமுதீனை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் இமாமுதீன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஆலந்தூரில் உள்ள அரிசி கடையில் வேலை பார்த்து வந்தேன். எனது உறவு பெண்ணான ரெனியா பானுவை காதலித்து வந்தேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அவர் முகமது சுல்தான் வீட்டில் வேலைக்கு சென்றுவந்தார். சுல்தான் அடிக்கடி தன்னை பாலியல் தொல்லைப்படுத்துவதாக ரெனியா பானு கூறினார்.

கடந்த 17-ந் தேதி சுல்தான் வீட்டிற்கு ரெனியா பானுவை அனுப்பிவிட்டு, பின்னால் நான் சென்றேன். அங்கு ரெனியா பானுவிடம் சுல்தான் பாலியல் தொல்லை தந்ததை கண்டதும் சத்தம்போட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சுல்தான் கத்தியை கொண்டுவந்து ரெனியாபானுவின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார்.

உடலை எரித்தேன்

இதனால் கோபமடைந்த நான் சுல்தானை தாக்கி கத்தியை பிடுங்கினேன். இதில் தடுமாறி கீழே விழுந்த சுல்தானின் வயிற்றில் கத்தியால் குத்தினேன். பின்னர் வயரை எடுத்து அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் நானும் ரெனியா பானுவும் அங்கிருந்து வந்துவிட்டோம்.

கொலை செய்யப்பட்டது வெளியே தெரிந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் உடலை எரித்துவிட்டால் தப்பிவிடலாம் என்று கருதி மறுநாள் வீட்டுக்கு சென்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு வந்துவிட்டேன். புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வந்தபோது நான் அங்கேயே நின்று பார்த்தேன்.

போலீசார் எங்கே கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஆனாலும் போலீசாரின் வலையில் சிக்கிவிட்டேன் என்று கூறினார்.

புழல் சிறையில் அடைப்பு

இதையடுத்து இமாமுதீன், ரெனியா பானு ஆகியோரை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்