கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து வேளாண் அதிகாரி எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் செந்திவேல் முருகன் எச்சரித்துள்ளார்.
நெல்லை,
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் செந்திவேல் முருகன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய பணிகள் தீவிரம்
பாபநாசம் அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் குறிப்பாக அம்பை, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, மானூர் பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்குவதில் வேளாண்மைத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்கள், அனைத்து வித உரங்களையும் குறிப்பாக டி.ஏ.பி. உரங்களை மூட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும் புதிய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் ரத்து
அதற்கு மாறாக கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். உர உரிமமும் ரத்து செய்யப்படும்.
உர இருப்பு மற்றும் விலைப்பட்டியல்கள் குறித்தான விவரம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் வைக்க வேண்டும். உரங்கள் பி.ஓ.எஸ். எந்திரங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் உரங்களுக்கு பட்டியல்கள் உடனே வழங்க வேண்டும். அனைத்து உர விற்பனை நிலையங்களும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.