ஆலங்குளம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
ஆலங்குளம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(37). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முருகேஷ்வரி (34). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகள் உள்ளனர்.
ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முருகேஷ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கரும்பனூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து பீடி சுற்றி, அவற்றை ஆண்டிப்பட்டியில் உள்ள பீடிக்கடையில் கொடுத்து வந்தார்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆண்டிப்பட்டியில் உள்ள பீடிக்கடைக்கு முருகேஷ்வரி வந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், முருகேஷ்வரியை வழிமறித்து தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் முருகேஷ்வரியை கையில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவருடைய கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது
இதை அறிந்த ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முருகேஷ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.