அம்பை, விக்கிரமசிங்கபுரத்தில் தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு

அம்பை, விக்கிரமசிங்கபுரத்தில் தாமிரபரணி புஷ்கர விழா ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Update: 2018-07-20 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

அம்பை, விக்கிரமசிங்கபுரத்தில் தாமிரபரணி புஷ்கர விழா ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ரத யாத்திரை ஊர்வலம்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது.

இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சிலைகள் ரத யாத்திரையாக நெல்லையில் இருந்து புறப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் வழியாக நேற்று முன்தினம் மாலை மீண்டும் நெல்லையை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அம்பை, விக்கிரமசிங்கபுரம் வழியாக பாபநாசம் சென்றடைந்தது. அம்பை அம்மையப்பர் கோவிலுக்கு வந்த ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் மலர் தூவினர்

பின்னர் மாலையில் பாபநாசம் கோவிலுக்கு ரத யாத்திரை வந்தது. அங்கு அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் முன்புள்ள படித்துறையில் சிலைகள் வைக்கப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகஸ்தியர், தாமிரபரணி சிலைகளுக்கு மலர் தூவினர். பின்னர் துறவியர் சங்க செயலாளர் ராமானந்த சுவாமிகள் கூறுகையில், வருகிற 30-ந் தேதி மீண்டும் பாபநாசத்தில் ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

பாபநாசத்தில் இருந்து புறப்படும் ரத யாத்திரை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சென்றடைகிறது. பின்னர் அன்று மாலை மீண்டும் பாபநாசம் வந்தடைகிறது. மறுநாள் காலை ரத யாத்திரை நிறைவு விழா பாபநாசம் தெற்கு அரண்மனை கைலாச மண்டபத்தில் நடக்கிறது என்றார். முன்னதாக மதியம் நெல்லை பேட்டை பகுதிக்குள் ரதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்