வெள்ளகோவில் நகரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வெள்ளகோவில் நகரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-07-20 22:30 GMT

வெள்ளகோவில்,

தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளகோவில் நகராட்சியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே வெள்ளகோவில் நகராட்சியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஷாஜகான் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, நிலவருவாய் அலுவலர் சின்னத்துரை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று வெள்ளகோவில் நகரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மளிகை கடைகள், டீக்கடைகள், பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் என்று சுமார் 400 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதும், விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் என்று சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.19 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த அபராத தொகை அவர்களிடம் இருந்து உடனடியாக வசூலும் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்