திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-07-20 22:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடித்திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186-வது வைகுண்டர் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் அவதாரபதியை சுற்றி ஒரு முறையும், கொடிமரத்தை சுற்றி 5 முறையும் வலம் வந்தது.

பின்னர் காலை 6.40 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை இணை தலைவர் அய்யாப்பழம், அவதாரபதியில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றினார். பின்னர் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் உச்சிபடிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் வள்ளியூர் தர்மர், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் சிங்கபாண்டி, விஜயகுமார், இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், பொன்னுத்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

30-ந்தேதி, தேரோட்டம்

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் மாலையில் அய்யா புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது.

11-ம் திருநாளான வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.05 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்