பவானி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நகை–பணம் திருடிய பிரபல கொள்ளையன் கைது

பவானி ஆப்பக்கூடல் பகுதிகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தார்கள். அப்போது திருட்டுப்போன கவரிங் நகையை தங்கம் என்று போலீசில் பெண் புகார் அளித்தது அம்பலமானது.

Update: 2018-07-20 22:00 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாரதி. நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள தன்னுடைய தோட்டத்துக்கு சென்றார். அப்போது பீரோவை பூட்டாமல் துவாரத்திலேயே சாவியை வைத்துவிட்டு வந்திருந்தார்.

இந்தநிலையில் வீட்டுக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே முனியப்பம்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் சின்னச்சாமி என்பவரின் வீட்டிலும் பீரோவில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் திருட்டுப்போனது.

இதுமட்டுமின்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்தியூர் காலனி பகுதியில் சம்பூர்ணம் என்பவருடைய வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, 1½ பவுன் கம்மல் ஆகியவையும் திருட்டுப்போயிருந்தது.

இதுகுறித்து 3 வீட்டாரும் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த 3 இடங்களிலும் பதிவான ரேகைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 3 இடங்களிலும் பதிவாகியிருந்தது ஒரே நபரின் கைரேகை என்றும், அந்த கைரேகை பிரபல கொள்ளையன் அந்தியூரை அடுத்த பிரம்மதேசம் சின்னக்குளத்தை சேர்ந்த வெங்கிடு என்கிற வெங்கடாசலத்தின் கைரேகையோடு ஒத்துப்போயிருந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடாசலத்தை தேடிச்சென்றார்கள். அப்போது ஆப்பக்கூடல் நால்ரோட்டில் உள்ள ஒரு பல் ஆஸ்பத்திரிக்கு அவர் சென்றது தெரியவந்தது. உடனே சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் வெங்கடாசலத்தை பிடித்து கைது செய்தார்கள்.

அப்போது அவர் பாரதி வீட்டில் நகையும், சின்னசாமி வீட்டில் பணத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டார். ஆனால் சம்பூர்ணம் வீட்டில் திருடிய நகை கவரிங் என்றும் அதை விற்க சென்றபோதுதான் கவரிங் என்று தெரிய வந்ததாகவும் வெங்கடாசலம் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பூர்ணத்தை அழைத்து திருட்டுப்போனது கவரிங் நகைகளா? என்று கேட்டார்கள். அதற்கு ஆமாம் என்று ஒத்துக்கொண்ட சம்பூர்ணம், தங்கம் என்று சொன்னால் போலீசார் அதற்கு பதில் வேறு தங்க நகைகளை மீட்டு கொடுப்பார்கள் என்று பொய் சொன்னதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிய போலீசார் பாரதி வீட்டில் இருந்து வெங்கடாசலம் திருடிய நகைகளை மீட்டார்கள்.

பவானி பகுதியில் பல்வேறு இடங்களில் வெங்கடாசலம் கைவரிசை காட்டியிருப்பதும், அவர் மீது போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்துவதற்காக ஆப்பக்கூடல் போலீசார் கொள்ளையன் வெங்கடாசலத்தை பவானி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

மேலும் செய்திகள்