நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது

நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-20 22:15 GMT

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் புருசோத்தமன்தாஸ். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. புருசோத்தமன்தாஸ் கோவை மத்திய சிறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் லட்சுமிபுரம் சாஸ்திரி தெருவில் வீடு மற்றும் 4 செண்ட் காலி இடத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காலி இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியினை தொடங்கியுள்ளார். இந்த பணியை ஜெகதீஸ்வரியின் அண்ணன்கள் அழகுராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வந்துள்ளனர். புதிய வீடு கட்டும் இடத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாலனின் (வயது 65) குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் உள்ளது.

இந்த இடம் அருகே வீடு கட்டி வருவதால் புருசோத்தமன்தாசுக்கும், ஜெயபாலன் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அழகுராஜன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் வித்யாசாகர் ஆகியோர் புருசோத்தமன்தாசின் இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஜெயபாலன், அவரது அண்ணன் வெங்கடசாமி மற்றும் அவரது தம்பிகள் கண்ணன், சிவாஜி (62) உள்பட 5 பேர் அங்கு வேலை செய்துகொண்டிருந்த அழகுராஜா உள்பட 3 பேரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில் ஜெயபாலன் உள்பட 5 பேரும் சேர்ந்து அழகுராஜன், கிருஷ்ணமூர்த்தி, வித்யாசாகர் ஆகியோரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த 3 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலன், சிவாஜி ஆகியோரை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்