மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளின் அனுமதியை புதுப்பிக்க இணையதளத்தில் வழிவகை செய்ய வேண்டும், கலெக்டரிடம் மனு

மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் அனுமதியை புதுப்பிக்க இணையதளத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2018-07-20 22:00 GMT

ஊட்டி,

கூடலூர் அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் சுலைமான் தலைமையில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் நடராஜன், நீலகிரி மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து மனுஅளித்தனர்.

பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் நடராஜன் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை புதுப்பிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அனுமதியுடன் மெட்ரிக், பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் தங்களது அனுமதியை புதுப்பிக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதியை புதுப்பித்து வருகின்றனர். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மெட்ரிக் மற்றும் தனியார் சுயநிதி பள்ளி, கல்லூரிகள் தங்களது அனுமதியை புதுப்பிக்க இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பித்தால், நீலகிரி மாவட்ட பெயர் விடுபட்டு உள்ளதால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. இதற்கு காரணம் நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதாலும், மலையிட பாதுகாப்பு செயல்படுவதாலும் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தான் மாஸ்டர் பிளான் விதிகள் உள்ளன. ஆனால், கூடலூர், பந்தலூர், குந்தா பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில் விண்ணப்பிக்கலாம் என நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். எனவே, மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் அனுமதியை புதுப்பித்து தொடர்ந்து இயங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கக்கூடிய வழிவகையை உடனடியாக ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்