மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ராமநாதபுரம் தலைமை காவலர் தங்கம் வென்று சாதனை

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமை காவலர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2018-07-20 23:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகுரு(வயது 34). இவர் சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். துப்பாக்கி சுடுவதில் திறமை பெற்ற இவர் ராமநாதபுரம் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தென்மண்டல அணி சார்பில் கலந்துகொண்டார்.

சென்னையில் கடந்த 10–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட ராஜகுரு தனது திறமையால் பிஸ்டல் பிரிவில் 10 சுற்றுகளில் குறிப்பிட்ட இலக்கினை 12 வினாடிகளில் சுட்டு வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். காவலர் முதல் உயர்அதிகாரிகள் வரையிலான பிரிவினர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் ராஜகுரு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும், கடந்த 2017–ம் ஆண்டு அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் காவல்துறை வரலாற்றில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் நிலையில் உள்ள ராஜகுரு தங்கப்பதக்கம் பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். இதையடுத்து அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்