கொடுமுடி அருகே கிணற்றில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற பீகார் வாலிபர் சாவு

கொடுமுடி அருகே கிணற்றில் விழுந்த செல்போனை எடுக்க முயன்ற பீகார் வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-07-20 22:00 GMT

ஊஞ்சலூர்,

பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டம் கிழக்கு செர்மா திவாரிடோலாவை சேர்ந்தவர் நாகேந்திரன் ஷா. அவருடைய மகன் கிருஷ்ண ஷா (வயது 24). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளத்துபாளையத்தில் உள்ள கிருஷ்ணசாமி என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ண ஷா நேற்று தோட்டத்தில் மருந்து அடித்து கொண்டிருந்தார். இதற்காக அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தண்ணீர் பிடிப்பதற்காக அருகே உள்ள கிருஷ்ணசாமியின் தம்பி ஜெயராஜின் கிணற்றுக்கு சென்றார்.

அங்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து கொண்டிருந்த தண்ணீரை வாளியில் பிடிப்பதற்காக கிருஷ்ண ஷா குனிந்தார். அப்போது அவரது சட்டை பையில் இருந்த செல்போன் தவறி கிணற்றில் விழுந்தது. உடனே அதை எடுப்பதற்காக அவர் கயிறு மூலம் உள்ளே இறங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததால் கிருஷ்ண ஷா கிணற்றின் உள்ளே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ண ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்