மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-20 22:45 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சக்ரவர்த்தி, சரவணன், மாவட்ட செயலாளர் கரூரான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதில் விவசாய சங்க தலைவர் மல்லையன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் ரீதியான தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்