டாக்சியில் தவறவிட்ட வெளிநாட்டுக்காரர்களின் பையை மீட்டு கொடுத்த போலீசார்
டாக்சியில் தவறவிட்ட வெளிநாட்டுக்கா ரர்களின் பையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
மும்பை,
டாக்சியில் தவறவிட்ட வெளிநாட்டுக்கா ரர்களின் பையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
பையை தவறவிட்டனர்
சூடான் நாட்டை சேர்ந்த முகமது அப்துல் யூசுப்(வயது22), அப்துல் ரகஹிர் பாசிர்(39) ஆகிய 2 பேர் மும்பையில் ஷூ இறக்குமதி தொழில் செய்வதற்காக கடந்த 17-ந்தேதி விமானத்தில் வந்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் டாக்சி பிடித்து கொலபாவில் உள்ள ஓட்டலுக்கு வந்து இறங்கினர். ஓட்டலுக்கு சென்ற பின்னர் தான் தாங்கள் கொண்டு வந்த பையை டாக்சியிலேயே மறந்துவிட்டு இறங்கியது அவர்களுக்கு தெரியவந்தது.
இந்தநிலையில், அவர்கள் வந்த டாக்சியும் அங்கிருந்து சென்று விட்டது. டாக்சியில் தவறவிட்ட பையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், யூரோ, தினார் ஆகிய வெளிநாட்டு பணம் மற்றும் அவர்கள் பாஸ்போர்ட்டும் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கொலபா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஒப்படைப்பு
இருவரும் தாங்கள் பயணம் செய்த டாக்சி பாந்திரா- ஒர்லி கடல்வழி பாலம் வழியாக வந்ததாக கூறினார்கள். இருப்பினும் டாக்சியின் பதிவெண் அவர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து, பாந்திரா- ஒர்லி கடல்வழி பால பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அவர்கள் பயணம் செய்த டாக்சியின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டாக்சி டிரைவரின் பெயர் மற்றும் செல்போன் எண் விவரங்களை தெரிந்து கொண்ட போலீசார் அவரை தொடர்பு கொண்டு பேசினர்.
ஆனால் அவர் முதலில் எதுவும் பேசவில்லை. பின்னர் போலீசார் பேசுவதை உணர்ந்து கொண்ட அவர் பயந்துபோய் மறுநாள் போலீசில், தான் எடுத்து வைத்திருந்த பையை கொடுத்தார். போலீசார் அதை சூடான் நாட்டை சேர்ந்த இருவரிடமும் ஒப்படைத்தனர்.