ஓய்வூதியர்களை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக்கூடாது கலெக்டர் ராமன் பேச்சு

ஓய்வூதியர்களை அலைக்கழித்தால், அதற்கான பிரதிபலனை பின்னர் அனுபவிக்க நேரிடும். எனவே ஓய்வூதியர்களை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக் கூடாது என கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2018-07-19 23:00 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் அரசு ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குனர் (ஓய்வூதியம்) கயிலைநாதன் முன்னிலை வகித்தார். கருவூல அலுவலர் புஷ்பா வரவேற்றார்.

கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். சில ஓய்வூதியர்கள், ஓய்வுபெற்று பல மாதங்கள் ஆகியும் பணப்பலன்கள் தராமல் காலம் கடத்தி வருவதாகவும், அவற்றை பெற்றுத்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

ஓய்வூதியர்கள் குறைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் பணப்பலன்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமையாகும். ஓய்வூதியம் மற்றும் ஓய்வுபெறும் அரசு அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்தவருக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பு கொடுத்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனு மீது இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும். ஓய்வூதியர்களை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக் கூடாது.

நாளைய தினம் உங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படலாம். ஓய்வூதியதாரர்களை இப்போது நீங்கள் அலைய வைத்தால், அதற்கான பிரதிபலனை பின்னர் நீங்களும் அனுபவிக்க நேரிடும். எனவே ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜேஷ், குற்றவியல் தாசில்தார் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்