மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்தால் நாடு பயனடையும் முதல்-மந்திரி பட்னாவிஸ் சொல்கிறார்
மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்தால் நாடு பயனடையும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்தால் நாடு பயனடையும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
புல்லட் ரெயில் திட்டம்
நாக்பூரில் நேற்று நடந்த மேல்-சபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மும்பை- ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் பிரச்சினையை கையில் எடுத்தார். இதே பிரச்சினையை சஞ்சய் தத், நீலம் கோரே, ஆனந்த் ஜக்தாப் மற்றும் சில எம்.எல்.சி.க்கள் எழுப்பி பேசினர்.
இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
விமான போக்குவரத்தை தொடங்கும்போது வெறும் 1 சதவீத மக்கள் மட்டுமே அதை பயன்படுத்தினர். தற்போதும் வெறும் 3 சதவீத மக்கள் மட்டும் தான் விமானம் மூலம் பயணம் செய்கின்றனர்.
நாடு பயன் அடையும்
இருப்பினும் அனைத்து நகரங்களும் தங்களுக்கு விமான நிலையம் வேண்டும் என்று தற்போது கோரிக்கை வைக்கின்றன. இதற்கு காரணம் உள்ளது. ஒரு விரைவான தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்ட போது, அது வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது, முதலீடுகளை ஈர்க்கிறது.
புல்லட் ரெயில்களால் ஏற்பட்ட வளர்ச்சிக்கு சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை உதாரணமாக கொள்ளலாம். மிக வேகமான தொடர்பு மூலம் பின்தங்கிய பகுதிகளை கூட வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும். புல்லட் ரெயில் திட்டத்தால் நமது நாடு நிச்சயம் பயனடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.