மராட்டியத்தில் 4 நாட்களாக நீடித்த பால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு நடவடிக்கை
மராட்டியத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரும் விவசாயிகள் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
மும்பை,
மராட்டியத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரும் விவசாயிகள் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
பால் விவசாயிகள் போராட்டம்
மராட்டியத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும், அரசு சார்பில் பாலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுவாபிமானி சேத்காரி கட்சி நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்தது. கடந்த 16-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது.
கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, அகமதுநகர், நாசிக், நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய மாவட்டங் களில் விவசாயிகள் தொடர்ந்து, பாலை சாலையில் கொட்டி தங்கள் கோரிக்கைக்காக தீவிரமாக போராடினர்.
கோரிக்கை நிறைவேறும் வரை மாநில தலைநகரம் மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
புனேயில் பாலுக்கு திண்டாட்டம்
ஆனால் போதிய இருப்பு மற்றும் குஜராத்தில் இருந்து ரெயில் மூலம் பால் கொண்டு வரப்பட்டதால் மும்பையில் நேற்று வரை பால் வினியோகத்தில் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு பால் பண்ணைகள் பால் கொள்முதல் செய்யாததால், புனேயில் பால் வினியோகம் முடங்கியது. இதனால் புனே மக்கள் பாலுக்காக திண்டாடினர்.
இந்தநிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ராஜூ ஷெட்டி எம்.பி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மந்திரி கிரிஷ் மகாஜனை அறிவுறுத்தினார்.
பேச்சுவார்த்தை
அதன்பேரில் அவர், ராஜூ ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் போது, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே, தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, ராஜூ ஷெட்டி எம்.பி. கூறினார்.
அதன்படி நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சாலைகளில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகள், கன்றுகளையும் கொண்டு வந்து சாலைகளின் குறுக்கே கட்டி வைத்து இருந்தனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போராட்டத்தை கைவிட தயார்
மேலும் கறந்த பாலை மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளின் மேல் ஊற்றி குளிப்பாட்டினார்கள். பாலால் நாயை குளிப்பாட்டிய காட்சிகளும் அரங்கேறின.
இந்தநிலையில், ராஜூ ஷெட்டி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பால் கொள்முதல் விலையை 25 ரூபாயாக நிர்ணயிக்க பண்ணைகளுக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உடனடியாக போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம். இல்லையெனில் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்’’ என்றார்.
இதனால் புேனயை அடுத்து மும்பையிலும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
போராட்டம் வாபஸ்
இந்தநிலையில் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயிப்பதாக நேற்று சட்டசபையில் பால்வளத்துறை மந்திரி மகாதேவ் ஜான்கர் அறிவித்தார். இந்த விலை நிர்ணயம் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பால் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக ராஜூ ஷெட்டி எம்.பி. நேற்று இரவு அறிவித்தார். போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.