பெங்களூருவில் சலுகை கட்டண பஸ் பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பி.எம்.டி.சி. நிர்வாகம் அறிவிப்பு
பெங்களூருவில் சலுகை கட்டண பஸ் பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பி.எம்.டி.சி. அறிவித்துள்ளது.;
பெங்களூரு,
பெங்களூருவில் சலுகை கட்டண பஸ் பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பி.எம்.டி.சி. அறிவித்துள்ளது.
பெங்களூரு நகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க...பெங்களூரு நகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் சலுகை கட்டண பஸ் பாஸ் 1–ம் வகுப்பு முதல் பி.யூ.கல்லூரி வரையிலான மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சலுகை கட்டண பாஸ் வேண்டி மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், அதற்குரிய பாஸ் கல்வித்துறை மூலம் அவர்கள் படிக்கும் பள்ளிக்கே அனுப்பி வைக்கப்படும்.
அந்த பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குரிய பாசை பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் பள்ளியில் சேரும்போது, பஸ் பாஸ் பெறவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க முடியும். 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகள் பஸ் பாஸ் பெற செயல்பாட்டு(பிராசசிங்) கட்டணமாக ரூ.200–ஐ செலுத்த வேண்டும்.
31–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க...பஸ் பாஸ் அச்சிடப்பட்டு நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 8–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு பாஸ்கள் நேரடியாக அவர்களின் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் பாஸ் பெறும்போது, அதற்குரிய கட்டணத்தை செயல்பாட்டு கட்டணத்துடன் சேர்த்து மாணவர்கள் வழங்க வேண்டும். இவர்களில் மாணவிகள் ரூ.600–ம், மாணவர்கள் ரூ.800–ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.200–ம் என கட்டணம் செலுத்த வேண்டும்.
பி.யூ.கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் சேர்க்கையின்போதே, பஸ் பாஸ் பெறவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டணமாக ரூ.200–ம், மற்ற பிரிவினர் ரூ.1,100–ம் செலுத்த வேண்டும். சலுகை கட்டண பஸ் பாஸ் பெற வருகிற 31–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.