ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் மருத்துவமனையில் மரணமடைந்த சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொலையா?
சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.;
மங்களூரு,
சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், எனவே உரிய விசாரணை நடத்த கோரியும் மடாதிபதியின் தம்பி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மரணமடைந்த மடாதிபதி உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மடத்தின் வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரூரில் அமைந்துள்ளது சிரூர் மடம். பிரசித்திபெற்ற இந்த மடத்தின் 30–வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார். இவர் கடந்த 1964–ம் ஆண்டு பிறந்துள்ளார். அதையடுத்து சிறுவயதிலேயே அதாவது கடந்த 1971–ம் ஆண்டே துறவறம் பூண்டு சிரூர் மடத்திற்கு வந்தார் என்றும், அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து மடாதிபதி ஆனார் என்றும் கூறப்படுகிறது. தற்போது 54 வயதான லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
சிரூர் மடம்கிருஷ்ணா மடத்தின் ஒரு அங்கமாக சிரூர் மடம் கருதப்படுகிறது. இதனால் சிரூர் மடாதிபதியாக இருந்த லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு என்று ஏராளமான சீடர்கள் உண்டு. மேலும் கிருஷ்ணா மடத்தின் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் என ஏனைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் லட்சுமிவரதீர்த்த சுவாமி கவனித்து வந்தார்.
மேலும் ஆன்மிக பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாகவோ அல்லது பா.ஜனதா சார்பிலோ போட்டியிடுவேன் என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார்.
கடைகள் மூடல்இவரது மறைவு கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று சிரூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. கிருஷ்ணா மடத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
மரணம் அடைந்த லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடல் அடக்கம்அவர்கள் மடாதிபதியின் உடலை சிரூர் மடத்திற்கு கொண்டு வந்து பல்வேறு பூஜைகள் செய்தனர். அதையடுத்து அவருடைய உடல் மடத்தின் வளாகத்திலேயே வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு அஞ்சலி செத்தினர். அதைதொடர்ந்து இந்து சம்பிரதாய முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பிய படி இருந்தனர். அதையடுத்து மடத்தின் வளாகத்திலேயே லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவித்து அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீசில் பரபரப்பு புகார்இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம்? என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா, இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.