சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை

சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை.

Update: 2018-07-19 22:30 GMT
தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகள் சென்னையை ஒட்டியிருந்தாலும் பல பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து நகராட்சிக்கு இணையாக உள்ளது. பேரூராட்சிகளின் பணிகளை செயல் அலுவலர்கள் கவனித்து வருகின்றனர்.

சென்னையை ஓட்டி மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பெருங்களத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியவர் ஓய்வுபெற்று பல மாதங்கள் ஆகியும் அங்கு புதிதாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் தான் அங்கு கூடுதல் பொறுப்பை கவனித்து வருகிறார்.

செயல் அலுவலர்கள் இல்லை

இதே போல பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர், திருநீர்மலை பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வருகிறார். இதே போல தாம்பரம் பகுதியில் முக்கிய பேரூராட்சியான மாடம்பாக்கத்திற்கும் செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை.

வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் அங்கு கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். அவர் மாற்றப்பட்டு அங்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டபோதிலும், அவர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இதனால் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அதனை கூடுதலாக கவனித்து வருகிறார்.

வளர்ச்சி பணிகள் பாதிப்பு

சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் விபத்தில் காயமடைந்து மருத்துவ விடுப்பில் உள்ளதால் கூடுவாஞ்சேரி செயல் அலுவலர் கூடுதலாக அந்த பொறுப்பில் உள்ளார். இவ்வாறு சென்னை புறநகரில் உள்ள முக்கிய பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் இல்லாமல், கூடுதல் பொறுப்பில் செயல் அலுவலர்கள் பணியாற்றுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பில் உள்ள செயல் அலுவலர்கள் அவர்கள் பதவியில் உள்ள பேரூராட்சிகளில் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். சில செயல் அலுவலர்கள் 3 பேரூராட்சிகளுக்கு பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றுவதால் அவர்களை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல இயலாத நிலையில் உள்ளதாக புறநகர் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதிகாரிகள் அலட்சியம்

சென்னையின் முக்கிய பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களை நியமிக்காமல் பேரூராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் தடையின்றி நடக்கவும், வரும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் செயல் அலுவலர்கள் பதவிகளை நிரப்ப வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்