அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்

அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2018-07-19 00:16 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

பாஸ்கர்: புதுவை அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, அமுதசுரபி, பாசிக், கான்பெட் போன்ற நிறுவனங்களுக்கு அரசு எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது? அதில் எத்தனை மதுபான கடைகள் லாபத்தில் இயங்கி வருகின்றன?

அமைச்சர் கந்தசாமி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 61 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதில் பாப்ஸ்கோ சார்பில் நடத்தப்படும் கடைகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன. பாசிக் நிறுவனம் மதுபான வகைகள் கொள்முதல் செய்ததில் ரூ.6 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம் மொத்த விற்பனையாளர்களுக்கு பாக்கித்தொகை வைத்துள்ளது. பாப்ஸ்கோ சார்பில் மதுபான வகைகள் கொள்முதல் செய்ததில் ரூ.20 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் பாக்கி உள்ளது.

பாஸ்கர்: மதுபான கொள்முதல் செய்யப்பட்டு அனைத்தும் விற்கப்பட்டுள்ளது. அந்த தொகை எங்கே போனது?

அமைச்சர் கந்தசாமி: பாப்ஸ்கோவில் 1,100 ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம்போடப்பட்டு உள்ளது.


பாஸ்கர்: தனியார் நடத்தும் மதுபான கடைகள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை. நஷ்டத்தில் இயங்கும் கடைகளை ஏன் அரசு நடத்த வேண்டும்? அதை தனியாருக்கு டெண்டர் விடுங்கள். அரசுக்கும் வருமானம் வரும்.

சிவா: நிர்வாக சீர்கேடுதான் இதற்கெல்லாம் காரணம். அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரூ.50 கோடி வரை கடன்பெற்றுள்ளார். அவருக்கு அவ்வளவு அதிகாரம் உள்ளதா? 10 வருடமாக அங்கு தணிக்கை நடைபெறவில்லை. ஒரு பார் வைத்து நடத்தியவர்கள் கூட சம்பாதித்து எம்.எல்.ஏ. ஆகி உள்ளனர். ஆனால் அரசு நடத்தும் மதுபான கடை அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன.

அமைச்சர் கந்தசாமி: அந்த கடைகளை டெண்டர் வைத்து தனியாருக்கு கொடுக்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்