நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை சந்திக்க மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் ஏற்பாடு ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்

மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி, வருகிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் ராகுல்காந்தி கலந்து கொள்ள இருக்கிறார்.

Update: 2018-07-18 23:15 GMT
மும்பை, 

மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி, வருகிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் ராகுல்காந்தி கலந்து கொள்ள இருக்கிறார்.

தேர்தல்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்கூட்டியே தயாராக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து அக்கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினரை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்ற மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

மக்கள் தொடர்பு கூட்டம்

இந்தநிலையில் அடுத்தகட்ட பணியில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் மக்கள் தொடர்பு கூட்டங்கள் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து மராட்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் மாநிலம் முழுவதும் உள்ள 288 சட்டசபை தொகுதிகளிலும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தி

இந்த பொதுக்கூட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்