கட்டண உயர்வை கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டண உயர்வை கண்டித்து அரசு மருத்துக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-18 22:41 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இங்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மிக குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு மருத்துவ கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.16,950-ல் இருந்து ரூ.33 ஆயிரமாகவும், 3, 4-வது ஆண்டு மாணவர்களுக்கு ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.67ஆயிரமாகவும், 2-வது ஆண்டு மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் எனவும் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சேர உள்ள மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்லூரியின் இயக்குனர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் மாணவர்கள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் திரண்டனர். அங்கு அவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் அங்கு சென்று மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இது தொடர்பாக கவர்னர், முதல்-அமைச்சர், கல்லூரியின் இயக்குனர் ஆகியோரை சந்தித்து மீண்டும் கோரிக்கை மனு அளிக்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்