பெங்களூருவில் வீடு புகுந்து துணிகரம் தொழில்அதிபர்-நண்பரை கத்தி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளை

பெங்களூருவில் வீடு புகுந்து தொழில்அதிபர் மற்றும் அவரது நண்பரை கத்தி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2018-07-18 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் வீடு புகுந்து தொழில்அதிபர் மற்றும் அவரது நண்பரை கத்தி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கத்தி முனையில் மிரட்டல்

பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் அருகே ஹெல்த் லே-அவுட்டில் வசித்து வருபவர் ராமேகவுடா, தொழில்அதிபர். இவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் வீட்டுக்கதவை திறந்து வைத்து கொண்டு ராமேகவுடா தனது நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 6 மர்மநபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ராமேகவுடாவின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

பின்னர் ராமேகவுடா மற்றும் அவரது நண்பரிடம் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். மேலும் பீரோவின் சாவியை கொடுக்கும்படி மர்மநபர்கள் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மர்மநபர்கள் ராமேகவுடாவை தாக்கினார்கள். மேலும் அவரிடம் இருந்து பீரோவின் சாவியை பெற்றார்கள்.

ரூ.50 லட்சம் கொள்ளை

அதன்பிறகு, கத்தி முனையில் ராமேகவுடா மற்றும் அவரது நண்பரை மிரட்டி பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மர்மநபர்கள் வாகனங்களில் ஏறி தப்பிச் சென்று விட்டார்கள். இதுபற்றி உடனடியாக அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசாருக்கு ராமேகவுடா தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ராமேகவுடா மற்றும் அவரது நண்பரை மிரட்டி ரூ.50 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் மர்மநபர்கள் கன்னடம், இந்தியில் பேசியதும் தெரிந்தது. இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்