மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம்: 23-ந் தேதி அரசியல் கட்சியினர் ஊர்வலமாக செல்லக்கூடாது
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.;
நெல்லை,
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஊர்வலமாக செல்லக்கூடாது என்று துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 23-7-1999 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக மனு கொடுக்க வந்தனர். அப்போது போலீஸ் தடியடி நடத்தியதில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆண்டும் வருகிற 23-ந் தேதி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுகுணாசிங் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் (போக்குவரத்து) பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள் கிருஷ்ணசாமி, விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ராமையா, வனசுந்தர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாக செல்லக்கூடாது
காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், செயலாளர் சொக்கலிங்ககுமார், பா.ஜனதா கட்சியை சேர்ந்த முருகதாஸ், புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த தங்கராமகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கண்மணி மாவீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கரிசல் சுரேஷ், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாரியப்ப பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது துணை கமிஷனர் சுகுணாசிங் பேசும்போது, “வருகிற 23-ந் தேதி அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வொரு கட்சியினருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும். அன்றைய தினம் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஊர்வலமாக செல்லக்கூடாது. விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அஞ்சலி செலுத்த வேண்டும்“ என்றார்.