காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை பிரிவுக்கு நவீன கருவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் கண்சிகிச்சை பிரிவில் நவீன கருவிகள் அமைக்கப்படும், என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் கண்சிகிச்சை பிரிவில் நவீன கருவிகள் அமைக்கப்படும், என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
காயல்பட்டினம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக் டர் கூறுகையில், ‘இந்த ஆஸ்பத்திரியில் ஆண்கள் வார்டு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கண் சிகிச்சை பிரிவில் விரைவில் நவீன கருவிகள் அமைக்கஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.பின்னர் காயல்பட்டினம் கோமான்புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் கடற்கரை, உரக்கிடங்கு, பயோ கியாஸ் அமையவுள்ள இடம் ஆகிய இடங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
சிறப்பு பள்ளிக்கூடம்
பின்னர் காயல்பட்டினத்தில் மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கூடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் காயல்பட்டினத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில், 50 முஸ்லிம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் இணை மானியமாக வழங்கினார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் அனு (பயிற்சி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் இந்திரவள்ளி மற்றும் பலர் உடன் இருந்தனர்.