கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை தொழிலை சரிவர கவனிக்காததை மனைவி கண்டித்ததால் சோக முடிவு

கோவில்பட்டியில், ஓட்டலுக்கு சென்று தொழிலை சரிவர கவனிக்காததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-18 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில், ஓட்டலுக்கு சென்று தொழிலை சரிவர கவனிக்காததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மது குடிக்கும் பழக்கம்

கோவில்பட்டி வேலாயுதபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் முத்துமணி (வயது 50). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு மணிகண்டன் (27) என்ற மகனும், அருள்கனி (28), சித்ரா (24) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

முத்துமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, ஓட்டலுக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலையில் முத்துமணி ஓட்டலுக்கு செல்லவில்லை. ஓட்டலுக்கு சென்று தொழிலை சரிவர கவனிக்காததை மனைவி கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மனைவி மட்டும் ஓட்டலுக்கு சென்றார்.

விஷம் குடித்து சாவு

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். மதியம் வீட்டுக்கு திரும்பி வந்த மல்லிகா தன்னுடைய கணவர் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று முத்துமணியை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்