உடன்குடி அருகே பயங்கர தீ விபத்து 5 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் பல லட்சம் பொருட்கள் கருகி நாசம்

உடன்குடி அருகே சமையல் செய்தபோது, தீப்பிடித்ததில் 5 குடிசைகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

Update: 2018-07-18 21:30 GMT
உடன்குடி, 

உடன்குடி அருகே சமையல் செய்தபோது, தீப்பிடித்ததில் 5 குடிசைகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

சமையல் செய்தபோது...

உடன்குடி அருகே இனாம் நயினார்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். மளிகைக்கடை உரிமையாளரான இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய தாயார் செல்வக்கனி (வயது 70), சொந்த ஊரில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகில் குடிசையால் சமையல் அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நேற்று மதியம் செல்வக்கனி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்தது. உடனே அவர் வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார்.

சிலிண்டர் வெடித்தது

அப்போது பலத்த காற்று வீசியதால், அருகில் உள்ள பிச்சம்மாள் (50), முருகேசன் (37), ஜெயலட்சுமி (50), தங்ககனி அம்மாள் (70) ஆகியோரது குடிசைகளுக்கும் தீ மளமளவென்று பரவியது. உடனே அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர். மேலும் குடிசைகளில் இருந்த சிலிண்டர்களை வெளியே தூக்கி வந்தனர்.

ஆனால் ஜெயலட்சுமியின் குடிசையில் இருந்த சிலிண்டரை வெளியே தூக்கி வர முடியவில்லை. இதனால் சிறிதுநேரத்தில் அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. அதன் சிதறல்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்று, அங்குள்ள தென்னந்தோப்பில் விழுந்து எரிந்தது.

தீயணைப்பு வாகனங்களில்...

தொடர்ந்து பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி, குடிசைகளில் எரிந்த தீயை அணைக்க போராடினர். இதுகுறித்து திருச்செந்தூர், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடிசைகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது.

எம்.எல்.ஏ. நிதி உதவி

தீ விபத்தில் 5 குடிசைகளும் முழுவதுமாக எரிந்து தரைமட்டமாயின. குடிசைகளில் இருந்த பீரோ, கட்டில், டி.வி., துணிகள் உள்ளிட்ட பொருட்களும், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை போன்றவையும் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் குடிசைகளில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர்.தீ விபத்தில் சேதம் அடைந்த குடிசைகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் ஆணையாளர் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் தாஹீர் அகமது, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசுவரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்