நடைபாதையில் எச்சில் உமிழ்ந்ததாக வாலிபர்களிடம் பணம் பறித்த 2 மாநகராட்சி ஊழியர்கள் கைது
நடைபாதையில் எச்சில் உமிழ்ந்ததாக கூறி, வாலிபர்களிடம் பணம் பறித்த மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
நடைபாதையில் எச்சில் உமிழ்ந்ததாக கூறி, வாலிபர்களிடம் பணம் பறித்த மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடைபாதையில் சென்ற வாலிபர்கள்
தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் அஜன்ட்குமார் (வயது25). இவர் தனது உறவினர் பங்கஜ், நண்பர் முகமது அன்வர் ஆகியோருடன் மும்பை ஒர்லி ஹாஜி அலி தர்காவுக்கு செல்வதற்காக மகாலட்சுமிக்கு ரெயிலில் வந்து இறங்கினார்.
பின்னர் அவர்கள் அங்குள்ள நடைபாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மாநகராட்சியின் கிளீன்-அப் மார்ஷல் ஊழியர்களான மங்கேஷ் ஷிண்டே, ஜிஜேந்திர ஷிண்டே ஆகிய 2 பேர் வந்தனர்.
அவர்கள் வாலிபர்களை வழிமறித்து 2 பேரும் நடைபாதையில் எச்சில் உமிழ்ந்ததாக கூறி, தலா ரூ.200 அபராதம் செலுத்தும்படி கூறினார்கள்.
பணம் பறித்த 2 பேர் கைது
ஆனால் அவர்கள் தாங்கள் எச்சில் உமிழவில்லை என கூறியும் இருவரும் கேட்கவில்லை. இதையடுத்து, அஜன்ட்குமார், முகமது அன்வர் இருவரும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தனர். ஆனால் ஊழியர்கள் இருவரும் அதற்கான ரசீதை கொடுக்காமல் அங்கிருந்து நடையை கட்டினர். இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கிளீன்-அப் மார்ஷல் ஊழியர்கள் இருவரையும் பிடித்து தார்டுதேவ் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், இருவரும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.