விளக்குகள் இன்றி உயர்கோபுர கம்பங்கள் மட்டுமே நிற்கின்றன சட்டசபையில் புகார்

பல இடங்களில் விளக்குகள் இன்றி உயர்கோபுர கம்பங்கள் மட்டுமே நிற்கின்றன என சட்டசபையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-07-17 22:53 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அனந்தராமன்: பாட்கோ மூலம் ஹைமாஸ் விளக்குகள் (உயர்மின் கோபுர விளக்குகள்) அமைக்கப்பட்டன. ஆனால் பல இடங்களில் விளக்குகள் இல்லாமல் கம்பங்கள் மட்டுமே உள்ளன. விளக்கு எரிந்த சில இடங்களிலும் விளக்குகளை கழற்றி சென்றுவிட்டனர்.

அசனா (அ.தி.மு.க.): எனது தொகுதியில் பல இடங்களில் விளக்கு கம்பங்கள் மட்டுமே உள்ளன. அதில் கொடியேற்றலாமா? என்று மக்கள் கேட்கின்றனர்.

அமைச்சர் கமலக்கண்ணன்: எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்றுதான் பாட்கோ மூலம் ஹைமாஸ் விளக்கு அமைக்கும் திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் கொண்டு வந்தார். அதில் விதிகளை கடைபிடிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. அந்த திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தவறுகள் நடந்தால் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இந்த பணிகளை முடிக்க வழிகாண வேண்டும்.

முதல்-அமைச்சர் நாரா யணசாமி: ஹைமாஸ் விளக்கு தொடர்பான கோப்புகள் திரும்பி வந்தது. ஏனென்று கேட்டால் அதற்கு டெண்டர் விடவில்லை என்கிறார்கள். கடந்த ஆட்சியில் இதே முறையில்தான் பணிகள் நடந்தன. அதை அமைத்துக்கொடுத்த காண்டிராக்டர்களுக்கும் பணம் தரப்படவில்லை. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தவறு நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே விளக்குகள் எரியவும், காண்டிராக்டர்களுக்கு பணம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்