செம்பூர்- வடலா இடையே அடுத்த மாதம் முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை கட்டணம் இருமடங்கு அதிகரிப்பு
செம்பூர்- வடலா இடையே அடுத்த மாதம் முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. அதே நேரத்தில் பயண கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
செம்பூர்- வடலா இடையே அடுத்த மாதம் முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. அதே நேரத்தில் பயண கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மோனோ ரெயில்
நாட்டிலேயே முதன் முறையாக மும்பையில் தான் மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. செம்பூர்- வடலா இடையே நஷ்டத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த சேவை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோனோ ரெயிலின் பெட்டி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, ஒரேயடியாக முடங்கியது.
அதன்பின்னர் கடந்த 8 மாதமாக மோனோ ரெயில் இயக்கப்படா மல் உள்ளது. வடலா- ஜேக்கப் சர்க்கிள் இடையிலான 2-ம் கட்ட மோனோ ரெயில் வழித்தடமும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
அடுத்த மாதம் முதல்...
இந்தநிலை யில், செம்பூர்- வடலா இடையே அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) தெரிவித்து உள்ளது.
இதுபற்றி எம்.எம்.ஆர்.டிஏ. கூடுதல் கமிஷனர் சஞ்சய் கன்டரே கூறுகையில், மோனே ரெயில் வழித்தடத்தில் பல மாதங்களாக மோனோ ரெயில் இயக்கப்படாமல் உள்ளது. எனவே முதலில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்கு பின்னர் மீண்டும் செம்பூர்- வடலா இடையே மோனோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
போதிய மோனோ ரெயில்கள் இல்லாததன் காரணமாக வடலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை தொடங்க மேலும் 6 மாதங்கள் வரை ஆகும், என்றார்.
கட்டணம் அதிகரிப்பு
இந்தநிலையில், மோனோ ரெயில் பயண கட்டணம் இருமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. செம்பூர்- ஜேக்கப் சர்க்கிள் இடையே முதல் 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.5, அதன்பின்னர் பயண தூரத்தை பொறுத்து ரூ.7, ரூ.9, ரூ.11, ரூ.14, ரூ.15, ரூ.19 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி செம்பூர்- வடலா இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.11 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது செம்பூர்- ஜேக்கப் சர்க்கிள் இடையே இந்த கட்டணம் ரூ.10, ரூ.20, ரூ.30, ரூ.40 என உயர்த்தப்பட்டு உள்ளது.