அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.63 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரை, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
நத்தம் ஆண்டியப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் நத்தத்தில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
திருச்சி மாவட்டம், பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). இவர் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் ஆவார். இவர் நத்தத்துக்கு வந்த போது, எங்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், தனக்கு அரசு அதிகாரிகளை நன்றாக தெரியும் என்றும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் வாங்கி தருவதாகவும் கூறினார். அதன்படி ஆய்வக உதவியாளர், கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் உள்ளிட்ட வேலைகள் வாங்கி தருவதாக கூறினார்.
இதனை உண்மை என்று நம்பி கடந்த 2015-ம் ஆண்டு நத்தம் பகுதியை சேர்ந்த 11 பேர் மொத்தம் ரூ.63 லட்சத்தை அவரிடம் கொடுத்தோம். இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து அவரிடம் பணத்தை திருப்பி கேட்டோம். அவர் பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.