தலைமை செயலக நடைபாதை கற்களை தோண்டி போராட்டம் மராட்டிய நவநிர்மாண் சேனாவினர் அதிரடி
மழையால் சேதம் அடைந்த பல்லாங்குழி சாலைகளை சீரமைக்காததை கண்டித்து மாநில அரசின் தலைமை செயலகத்தின் நடைபாதை கற்களை தோண்டி எடுத்து மராட்டிய நவநிர்மாண் சேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
மழையால் சேதம் அடைந்த பல்லாங்குழி சாலைகளை சீரமைக்காததை கண்டித்து மாநில அரசின் தலைமை செயலகத்தின் நடைபாதை கற்களை தோண்டி எடுத்து மராட்டிய நவநிர்மாண் சேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டும், குழியுமான சாலைகள்
மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பல்லாங்குழி சாலைகள் விபத்துகளை உண்டாக்கி உயிர்பலியும் வாங்கி வருகின்றன.
மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலைகள் சரி செய்யப்படாததை கண்டித்து ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனாவினர் தங்கள் பாணியில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நடைபாதை கற்களை தோண்டினர்
இந்தநிலையில் மழையால் பல்லாங்குழிகளாக மாறியுள்ள சயான்- பன்வெல் நெடுஞ்சாலை சரி செய்யப்படாததை கண்டித்து நேற்று முன்தினம் நவிமும்பை துர்பேயில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகுந்து அக்கட்சியினர் அங்கிருந்த கணினி, இருக்கைகள், நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயா முன் நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் கையில் கோடரிகள் வைத்திருந்தனர்.
திடீரென மந்திராலயா முன் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்களை கோடரிகளை கொண்டு தோண்டி எடுத்து சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
6 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் ெமரின்டிரைவ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடைபாதை கற்களை தோண்டி வீசி கொண்டிருந்த நவநிர்மாண் சேனாவினர் 6 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே தங்கள் கட்சியினரின் இந்த செயலை நவநிர்மாண் சேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே நியாயப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நடைபாதை கற்களை தோண்டியதால் எங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் மாநிலம் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்றார்.