முறையாக பஸ் இயக்க கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தியாகதுருகம் அருகே முறையாக பஸ் இயக்க கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே தியாகை மற்றும் சிறுவல் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் தியாகதுருகத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக காலை நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகை, சிறுவல் வழியாக தியாகதுருகத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த டவுன் பஸ் சரியாக வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலையிலும் சிறுவல் கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக பஸ் இயக்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் அங்கு விரைந்து வந்து பஸ் கண்டக்டர், டிரைவர் மூலம் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது நாளை(அதாவது இன்று) முதல் சரிவர பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் மாணவர்களிடம், நாளை முதல் சரிவர பஸ் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக்கொண்டனர். இதையேற்ற மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.