இருதய குழாய் அடைப்பை கண்டறிய 3டி வண்ணப்படம் எடுக்கும் வசதி
இருதய குழாய் அடைப்பை கண்டறிய 3டி புகைப்படம் எடுக்கும் வசதியை மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி அறிமுகம் செய்து உள்ளது.
மதுரை,
மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இருதய நோய் சிகிச்சை டாக்டர்கள் சம்பத்குமார், கணேசன், செல்வமணி, சிவக்குமார், ஜெயபாண்டியன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஒருவருக்கு இருதய குழாய்களில் தேங்கும் கொழுப்பு படிமங்களின் காரணமாக இருதய தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது 17 வயது இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறது. இதற்கு புகை பிடிப்பது, சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை தான் முக்கிய காரணங்களாகும். ஆனால் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது நவீன கால மருத்துவ சிகிச்சையால் பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது.
மாரடைப்புக்கு சிகிச்சை அளிக்க மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் உள்ள 3 கேத் ஆய்வகத்தில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. தற்போது அதனை மேம்படுத்தும் விதமாக ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் ஓசிடி (ஆப்டிகல் கொஹெரன்ஸ் டோமோகிராபி) எனப்படும் ஒளி ஒத்திசைவு 3டி வண்ணப்பட தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் தான் கேத் ஆய்வகத்துடன் ஓசிடி கருவி இணைக்கப்பட்டு உள்ளது.
மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் தன்மைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை அல்லது ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. ஸ்டென்ட் பொருத்துவதற்காக ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு அடைப்பை கண்டறிய தற்போது கரோனரி ஆஞ்சியோகிராபி மூலம் 2டி படங்களை மட்டுமே எடுக்க முடியும். ஆனால் ஓசிடி மூலம் நோயாளிகளின் இருதய குழாயில் நேரடியாக கேமரா செலுத்தி இருதய நாள முழு அமைப்பையும் வண்ணப்படங்களாக எடுக்க முடியும். இதனால் கொழுப்பு அடைப்பு எவ்வளவு நீளம்-அகலத்திற்கு உள்ளது என்றும், வேறு இடங்களில் உள்ள அடைப்புகள் குறித்தும் மிக துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் அந்த அடைப்பு கொழுப்பா, சுண்ணாம்பா, ரத்தம் கட்டியதா என்பதனை கண்டறிய முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
அதோடு ஓசிடி உதவியுடன் ஸ்டென்ட் பொருத்தும்போது ஸ்டென்ட் சரியாக விரிவு அடைந்து இருக்கிறதா என்பதனையும், ரத்த ஓட்டம் தற்போது எப்படி உள்ளது என்பதனையும் கண்காணித்து விட முடியும். அதில் தவறு இருக்கும்பட்சத்தில் உடனடியாக சரி செய்ய முடியும். ஆனால் கரோனரி ஆஞ்சியோகிராமில் இது போன்ற வசதி கிடையாது.
மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் ஸ்டென்ட் பொருத்துவதற்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் பெறப்பட்டது. ஏனென்றால் ஸ்டென்ட் விலை மட்டும் ரூ.1 லட்சத்திற்கு இருந்தது. ஆனால் மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஸ்டென்ட் விலையை ரூ.30 ஆயிரம் என குறைத்து உள்ளது. எனவே தற்போது ஸ்டென்ட் பொருத்த அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் குறைந்து இருந்தாலும் வசதிகளை பொருத்தவரை அதிக அளவில் மேம்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.