மதுரையில் அமைச்சர்கள் தங்கிச்செல்லும் ஓட்டலில் வருமான வரி அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
மதுரையில் அமைச்சர்கள் அடிக்கடி தங்கிச்செல்லும் ஓட்டலில் நேற்று 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
மதுரை,
தமிழக அரசின் பல்வேறு பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வரும் முதல் நிலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரையின் (வயது 60) வீடுகள், அலுவலகங்கள், அவருடைய மகன்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்றுமுன்தினம் சோதனை தொடங்கினர்.
சென்னையிலும், அருப்புக்கோட்டையிலும் நேற்று 2-வது நாளாக இந்த சோதனை நீடித்தது.
மதுரை கே.கே.நகர், பூங்காவிற்கு எதிரே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் எஸ்.பி.கே. என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரன் கவனித்து வருகிறார். இந்த ஓட்டலிலும் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. அப்போது ஓட்டலில் இருந்து பல்வேறு சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, ஓட்டலுக்கு பின்னால் உள்ள செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக இங்கு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து பல்வேறு சொத்து பத்திரங்கள், கணக்கில் வராத தங்க நகைகள் வாங்கியதற்கான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார். மேலும், அங்கிருந்த சொகுசு காரில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர ஈஸ்வரனின் வங்கி பரிவர்த்தனை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதியம் 3 மணிக்கு சோதனை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்களை மதுரை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த எஸ்.பி.கே. ஓட்டலுக்கு அமைச்சர்கள் சிலர் அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். குறிப்பாக மூத்த அமைச்சர் ஒருவர் அங்கு அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். அந்த விவரங்கள் பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈஸ்வரனிடம் விசாரித்துள்ளனர்.