காவிரி கரையோர பகுதிகளில் புகைப்படம் எடுப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்

காவிரி கரையோர பகுதிகளில் புகைப்படம் எடுப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2018-07-17 22:45 GMT
சேலம்,

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகள் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் மற்றும் எடப்பாடி தாலுகாக்களில் உள்ள நீர்வழித்தடங்களான மேட்டூர் அணை பூங்கா, செக்கனூர் அணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது சுயபடங்களோ(செல்பி) எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்