வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

திருச்சி வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக 4 மணி நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டம் நடத்த தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2018-07-17 22:45 GMT
திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்-ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த மாதம் பழைய பால் பண்ணை அருகே புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது பல ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த 277 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. புதிய வெங்காய மண்டி வியாபாரிகள் தனியாக சுமைப்பணி தொழிலாளர்களை நியமித்துக்கொண்டனர். இதனால் வேலை இழந்த பழைய வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களுக்கு வேலை வழங்க கோரி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் உள்பட பல போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மாலை திருச்சி தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் நடைபெற்றது. துணை ஆணையர் லிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் ராமலிங்கம் (தொ.மு.ச), ராஜா, ராமர் (சி.ஐ.டி.யு), வெற்றி செல்வன் (எல்.எல்.எப்), வெங்காய மண்டி வியாபாரிகள் தரப்பில் தங்கராஜ், வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது வெங்காய வியாபாரிகள் தரப்பில் பழைய சுமைப்பணி தொழிலாளர்களில் பாதி பேருக்கு தான் வேலை வழங்க முடியும், அவர்கள் புதிய வெங்காய மண்டியில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 277 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், மூட்டை ஏற்றி இறக்கும் ஒரே பணியை இரண்டு பேர் செய்யும் போது கூலி குறைந்து விடும் என்றார்கள். இதனால் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 24-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட வேண்டும். பழைய வெங்காய மண்டியில் சுமைப்பணி தொழிலாளர்கள் எந்தெந்த வேலைகளை செய்தார்களோ அதே வேலையை திரும்பவும் அவர்களுக்கு வழங்கவேண்டும், லோக் அதாலத் கோர்ட்டில் கொடுக்கப்பட்ட உத்தரவு சுமைப்பணி தொழிலாளர்களை கட்டுப்படுத்தாது. பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வெங்காய மண்டி வியாபாரிகளின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்’ என்றார்கள். 

மேலும் செய்திகள்