ஊட்டி அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தைப்புலி சாவு

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி, புள்ளி மான், கடமான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

Update: 2018-07-17 22:30 GMT
ஊட்டி,

வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுத்தைப்புலி, புலி போன்ற விலங்குகள் காட்டெருமைகள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கும், கரடிகள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கும் வருவதால் வனவிலங்குகள் இடையே சண்டை நிகழ்கிறது.

இந்த நிலையில் ஊட்டி அருகே சின்னகுன்னூர் கிராமத்தில் தங்காடு காலனி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். இறந்து கிடந்தது 5 வயதான ஆண் சிறுத்தைப்புலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை டாக்டர் சுகுமார் மற்றும் மருத்து குழுவினர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறும்போது, சிறுத்தைப்புலிக்கும், கரடிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், சிறுத்தைப்புலியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் அதன் வயிற்றுப்பகுதியை கரடி நகத்தால் கிழித்ததில் குடல் சரிந்து விழுந்து இறந்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்