நான் உணர்ச்சிவசப்படும் நபர்: இது எனது சகஜமான குணம் குமாரசாமி பேட்டி

நான் உணர்ச்சிவசப்படும் நபர், இது எனது சகஜமான குணம், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

Update: 2018-07-17 23:00 GMT

பெங்களூரு, 

நான் உணர்ச்சிவசப்படும் நபர், இது எனது சகஜமான குணம், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

முதல்–மந்திரி குமாரசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கண்ணீர் சிந்தினேன்

மாநில மக்களின் பிரச்சினைக்காக நான் பகிரங்கமாக கண்ணீர் சிந்தினேன். அரசு துறைகளில் தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறேனோ அதே அளவுக்கு நான் உணர்ச்சிவசப்படும் நபராகவும் இருக்கிறேன். இது என்னுள் இருக்கும் சகஜமான குணம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனது நடவடிக்கையும் கண்ணீர் சிந்தும் அளவுக்கே பாரபட்சமற்ற முறையில் இருக்கிறது. எனது குடும்பத்தை போல் உள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது உண்மை தான். எனது கட்சி நிர்வாகிகளிடம் எனது வேதனையை பகிர்ந்து கொண்டேன். எனது கண்ணீருக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிறவி குணங்கள்

நான் மாநில முதல்–மந்திரி என்பதைவிட ஒரு சராசரி மனிதன். என்னிடத்திலும் சில பிறவி குணங்கள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும்போது உணர்ச்சிவசப்பட்டேன். நான் அரசு நிகழ்ச்சிகளில் கண்ணீர் விடவில்லை. அன்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசினேன். எனக்கு காங்கிரஸ் கட்சி தொல்லை தருகிறது என்று நான் சொல்லவில்லை.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய நான் கஷ்டப்பட்டேன். நல்ல பணிகளை ஆற்றி வருகிறேன். ஆயினும் என்னை மக்கள் ஆதரிக்கவில்லை. மக்களின் ஊக்கம் எனக்கு கிடைக்கவில்லை. மக்கள் என்னை நம்பவில்லை என்று பேசும்போது உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு கட்சி எனக்கு தொல்லை கொடுத்ததால் நான் கண்ணீர் விட்டேன் என்று சிலர் கூறுவது சரியல்ல. இதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. தேசிய அளவில் விவாதம் நடத்துகின்றன. இதனால் யாருக்கு லாபம். இது தேவையா?.

ராணுவ மந்திரியை...

கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை நாளை(இன்று) டெல்லியில் கூட்டி இருக்கிறேன். மெட்ரோ ரெயில் பணிகள் சிறிது ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் வருகிறது. அதுபற்றி ராணுவ மந்திரியை சந்தித்து பேசி அதற்கு அனுமதி பெற உள்ளேன். இன்னும் சில மத்திய மந்திரிகளை சந்தித்து பேச இருக்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “பிரதமர் மோடி, அத்வானி, எடியூரப்பா, யோகிஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் உணர்ச்சிப்பட்டு கண்ணீர் வடித்த தருணங்கள் உள்ளன. பழைய வி‌ஷயங்களை விரைவாக மறந்துவிடும் கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு இதை நினைவூட்ட விரும்புகிறோம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுவது என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு ஆகும். இத்தயை மனித உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்