கன்னிவாடி அருகே ஐகோர்ட்டு உத்தரவுப்படி மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்

கன்னிவாடி அருகே, ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் டி.ஜி.வினய் மரக்கன்றுகளை நட்டார்.

Update: 2018-07-17 22:30 GMT
கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே நீலமலைக்கோட்டையில் ஜோத்தால்நாயக்கன்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கான வரத்து வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்து, அதில் தென்னை மரங்களை வளர்த்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அப்போது ஓடை பகுதியில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் வெட்டப்பட்டன. இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றவும், அப்போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நீலமலைக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து நீலமலைக்கோட்டை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் மரக்கன்றுகளை நட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஜோத்தால்நாயக்கன்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கவும், பசுமை பரப்பளவை அதிகரிக்கவும் 10 ஆயிரம் பனை மர விதைகள் ஊன்றப்பட உள்ளது. மேலும் மரக்கன்றுகளும் நடப்படுகின்றன. இதில் தனியார் தொண்டு நிறுவனங்களுடன், பள்ளி மாணவ-மாணவிகளும் இணைந்து செயல்படுகின்றனர். இதற்காக ரூ.15 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் 10 ஏக்கரில் நாற்றுப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலமலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 13 கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை குடிநீர் பயன்பாட்டுக்காக ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ்ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்