ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: “எங்களை யாரும் மூளை சலவை செய்யவில்லை” இலவச சட்ட உதவி மையத்தில் மடத்தூர் கிராம மக்கள் மனு

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த எங்களை யாரும் மூளை சலவை செய்யவில்லை’ என்று மடத்தூர் கிராம மக்கள், இலவச சட்ட உதவி மையத்தில் மனு கொடுத்து உள்ளனர்.;

Update: 2018-07-17 21:00 GMT
தூத்துக்குடி, 

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த எங்களை யாரும் மூளை சலவை செய்யவில்லை’ என்று மடத்தூர் கிராம மக்கள், இலவச சட்ட உதவி மையத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது;-

ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது.

அதன் விசாரணை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் தமிழக அரசு மூத்த வக்கீல்களை நியமித்து வழக்கு நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் கட்டிட சான்று, தொழிலாளர் துறை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் அரசு திரும்ப பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

மூளை சலவைசெய்யவில்லை

கலவரம் தொடர்பாக போலீசார் பல பொய் வழக்குகளை பதிவு செய்து மக்களை கைது செய்து வருகிறார்கள். மூளை சலவை செய்து விட்டார்கள் என்ற வதந்தி பரப்பப்படுகிறது. நாங்கள் மக்களாக சேர்ந்து தான் போராடினோம். எங்களை யாரும் மூளை சலவை செய்யவில்லை. எங்கள் ஊரை சேர்ந்த சிலர் பொய் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

உண்மையில் ஸ்டெர்லைட் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டம். போலீசாரால் கைது செய்யப் பட்டு உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சட்ட உதவிகள் செய்தனர்.

ஆலையை வெளியேற்ற வேண்டும்

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

எனவே அரசு இந்த ஆலையை சிப்காட் வளாகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். பொய் வழக்குகள் போடுவதையும் கைது செய்வதையும் நிறுத்த வேண்டும். வழக்குகளை வாபஸ் பெற்று சிறையில் உள்ளவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்