சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா தொடங்கியது கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-07-17 21:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரநாராயண சுவாமி கோவில்

தென்தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ-வைணவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.

உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதிஅம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தவசு விழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு விழா ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இத்தகைய சிறப்புமிக்க ஆடித்தவசு விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து தர்ப்பை புற்கள், பட்டு வஸ்திரங்கள், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட புண்ணிய தீர்த்தங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

தேரோட்டம்

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

ஆடித்தவசு விழா 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் காட்சி மாலை 5 மணிக்கும், இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்