தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு மேலும் 2 ரோந்து கப்பல்கள் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா தகவல்

தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு மேலும் 2 ரோந்து கப்பல்கள் வர இருப்பதாக, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா தெரிவித்தார்.

Update: 2018-07-17 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு மேலும் 2 ரோந்து கப்பல்கள் வர இருப்பதாக, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா தெரிவித்தார்.

புதிய கட்டிடம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே இந்திய கடலோர காவல்படைக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பிரசாந்த், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய், துணைத்தலைவர் வையாபுரி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சிவக்குமார், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுனாசிங், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், விஜயநாராயணம் இந்திய கடற்படை ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் நிலைய கமாண்டர் விஷால்குப்தா, இணையம் துறைமுக திட்ட சிறப்பு அதிகாரி விஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கியத்துவம்

தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படை நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் வீரர்கள் மற்றும் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் கப்பல்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற் காக அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்து உள்ளது. இந்தியாவின் தெற்கு மூலையில் சர்வதேச கடல்வழிப்பாதை அருகே அமைந்து இருக்கிறது. தூத்துக்குடி கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து செய்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன.

2 ரோந்து கப்பல்

மேலும் தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தனியாக விமான தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையம் அருகே நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிவடைந்ததும் ஓரிரு ஆண்டுகளில் விமான தளம் அமைக்கப்படும். இந்த விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும். இது கண்காணிப்பு பணி மட்டுமின்றி, மீனவர்களுக்கு உதவியாகவும் அமையும். அதே போன்று தூத்துக்குடி கடலோர காவல்படையுடன் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு ரோந்து கப்பல் சேர்க்கப்பட உள்ளது. 2020-ம் ஆண்டு மேலும் ஒரு ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்