நெல்லை டவுனில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

நெல்லை டவுனில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-16 23:00 GMT
நெல்லை,


இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் மகன் நர்பத் குமார் (வயது 28). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இதற்காக டவுன் சுந்தரர் தெருவில் நண்பருடன் வசித்து வந்தார்.

நர்பத் குமாரின் நண்பர் மதுரைக்கு சென்று விட்டு நேற்று காலை திரும்பினார். அப்போது அறையின் உள்ளே நர்பத் குமார் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நர்பத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நர்பத் குமாருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்பத்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்