மகளின் திருமண அழைப்பிதழை வாங்கிவிட்டு வந்தபோது விபத்து: தம்பதி உள்பட 3 பேர் பலி
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள்.
குறிஞ்சிப்பாடி,
மகளின் திருமண அழைப்பிதழை அச்சகத்தில் இருந்து வாங்கிவிட்டு வந்தபோது நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு நந்தன்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 48). தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி(40). இவர்களுக்கு நித்யா என்ற மகளும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். நித்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 28-ந் தேதி நடைபெற உள்ளது.
எனவே ராமலிங்கம், தனது மகளின் திருமண அழைப்பிதழ் அச்சடிக்க குறிஞ்சிப்பாடியில் ஒரு அச்சகத்தில் கொடுத்திருந்தார். அழைப்பிதழ் அச்சடிக்கும்பணி முடிந்துவிட்டதாகவும், அதனை வாங்கிச்செல்லுமாறும் அச்சக உரிமையாளர் செல்போன் மூலம் ராமலிங்கத்திடம் நேற்று கூறி உள்ளார்.
இதையடுத்து அதனை வாங்கி வருவதற்காக கண்ணகி, தனது அண்ணன் தியாகவல்லி நடுத்திட்டை சேர்ந்த தணிகாசலத்தை (45) அழைத்தார். அவரும், தான் வருவதாக கூறினார். அதன்படி தனது மோட்டார் சைக்கிளில் தணிகாசலம் நொச்சிக்காட்டிற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து தணிகாசலம், ராமலிங்கம், கண்ணகி ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றனர். அங்கு அச்சகத்தில் இருந்து திருமண அழைப்பிதழை வாங்கிக்கொண்டு, 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் நொச்சிக்காட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தணிகாசலம் ஓட்டினார். இரவு 7.30 மணி அளவில் குள்ளஞ்சாவடி-ஆலப்பாக்கம் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி மார்க்கமாக சென்ற கார், எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கண்ணகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த தணிகாசலமும், ராமலிங்கமும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமலிங்கம் இறந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் தணிகாசலம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தணிகாசலமும் இறந்தார்.
இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பலியானவர்களின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு 3 பேரது உடல்களை பார்த்து, அவர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான தணிகாசலத்திற்கு தவமணி என்ற மனைவியும், வித்யா, பேபி ஆகிய 2 மகள்களும், காரல்மார்ஸ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தினால் தியாகவல்லி, நொச்சிக்காடு கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.